இந்தியா

கையில் இருந்தது வெறும் 3 ரூபாய்; கண்டெடுத்தது 40 ஆயிரம் ரூபாய்: உரிமையாளரிடம் ஒப்படைத்த தொழிலாளியின் நேர்மைக்குக் குவியும் பாராட்டு

செய்திப்பிரிவு

மும்பை

பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால், பணத்தால் சிலரது நேர்மையை, சிறிதளவுகூட அசைத்துப் பார்க்க முடியாது என்பதற்கு 54 வயது நபரின் இந்த செய்கையே எடுத்துக்காட்டு.

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா பகுதியைச் சேர்ந்தவர் தனாஜி ஜாக்டலே. இவர், தீபாவளி (அக்.27) அன்று தஹிவாடி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். தனிப்பட்ட வேலையாக தஹிவாடிக்கு வந்தவருக்கு தனது சொந்த ஊரான பிங்காலிக்கு திரும்பிச் செல்ல பேருந்துக் கட்டணத்துக்குப் போதிய அளவு பணம் இல்லை. ஊருக்குச் செல்ல 10 ரூபாய் தேவை. ஆனால் பையில் 3 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

செய்வதறியாது தனாஜி ஜாக்டலே நின்று கொண்டிருந்தபோது அங்கு கேட்பாரற்றுக் கிடந்த பை ஒன்றைப் பார்த்துள்ளார். அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அதில் ரூ.40,000 பணம் இருந்துள்ளது. உடனே அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அங்கே ஒரு நபர் கலக்கத்துடன் எதையோ தேடித் திரிவதைப் பார்த்து அவரிடம் விசாரித்துள்ளார். அந்த நபர் தனது பணப்பையைத் தவறவிட்டதாகவும் அதில் தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்காக ரூ.40,000 வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

உடனே அந்த நபரிடம் தனாஜி பணத்தை ஒப்படைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அதன் உரிமையாளர் தனாஜியின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு ரூ.1000 பரிசாகத் தர முன்வந்துள்ளார். ஆனால், அந்தத் தொகையை மறுத்த தனாஜி தான் ஊருக்குச் செல்ல வெறும் 7 ரூபாய் போதும் என்று கேட்டு அதை மட்டும் பெற்றுச் சென்றுள்ளார்.

தனாஜியின் நேர்மை வெளியே தெரியவர அவருக்கு சத்தாரா எம்.எல்.ஏ., ஷிவேந்திரராஜே போஸாலே (பாஜக) பாராட்டு தெரிவித்துள்ளார். இன்னும் சில தனியார் நிறுவனங்களும் அவருக்குப் பாராட்டு தெரிவித்தன.

ஆனால், அவர் யாரிடமும் ரொக்கப் பரிசை வாங்க மறுத்துவிட்டார். தனாஜியின் நேர்மையை அறிந்த அமெரிக்க வாழ் இந்தியர் ராகுல் பார்கே அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்க முன்வந்தார். ஆனால் அதையும் தனாஜி மறுத்துவிட்டார்.

இது குறித்து தனாஜி, "யாருடைய பணத்தையும் எடுத்துக்கொண்டு நாம் நிம்மதியாக திருப்தியாக வாழ்ந்துவிட முடியாது. எனது செய்கையின் மூலம் நான் சொல்ல விரும்புவது, மக்கள் நேர்மையுடன் வாழ வேண்டும் என்ற கருத்தை மட்டுமே" என்றார்.

பிடிஐ

SCROLL FOR NEXT