பாதுகாப்பு ஊழியர்களுக்கு முகக்கவசங்களை விநியோகிக்கும் சிஐஎஸ்எப் படையினர் | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

டெல்லி காற்றுமாசு குறித்து விவாதிக்க பிரதமரின் முதன்மைச்செயலர் அவசரக் கூட்டம் 

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

டெல்லி-தலைநகர் பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு குறித்து விவாதிக்க பிரதமரின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் காற்று மாசு இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை தொட்டு, நெருக்கடி நிலையை இன்று எட்டியுள்ளது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து அவசர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக பிரதமரின் முதன்மைச்செயலரரும் அமைச்சரவைச் செயலாளரும் கலந்துகொள்ளும் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுவாசக் கவசங்களை (mask) விநியோகிக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்).

இன்று மாலை நடைபெறும் இக் கூட்டத்தில் டெல்லி அதிகாரிகள் தவிர, பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசாங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் காணொலி கலந்துரையாடலும் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமரின் முதன்மை செயலாளர் பி கே மிஸ்ரா மற்றும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் காவ்பா ஆகியோர் கூட்டத்தை நடத்துவார்கள்.

டெல்லி மற்றும் செயற்கைக்கோள் நகரங்களில் மாசு அளவு இன்று காலை மீண்டும் உயர்ந்தது, காற்றின் தரம் பல இடங்களில் 'கடுமையான பிளஸ்' வகையின் எல்லையில் உள்ளது.

தேசிய தலைநகரில் பொது சுகாதார அவசரநிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். டெல்லி மற்றும் நொய்டாவில் செவ்வாய்க்கிழமை வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கடுமையான புகைமூட்டம் காரணமாக 37 விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது. கடும் மாசு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் பெரும் இடையூறு ஏற்படுத்தியது.

காற்று மாசுபாடு காரணமாக தற்போது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்) நகரம் முழுவதும்முகமூடிகளை வழங்கிவருகின்றனர்.

SCROLL FOR NEXT