இந்தியா

காற்று மாசு: பஞ்சாபில் வயல்வெளியில் சருகுகளை எரிக்கும் விவசாயிகள்: 2,923 வழக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

சண்டிகர்
பஞ்சாபில் இந்த சீசனில் நவம்பர் 1-ம் தேதி வரை வயல்வெளிகளில் காய்ந்த சருகுகளை 20,729 பேர் எரித்ததாக தெரிய வந்துள்ளது, இதுதொடர்பாக 2,923 விவசாயிகள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுவரை இல்லாத அளவு காற்று மாசு ஏற்பட்டு பெரும் பாதிப்பு உருவாகி வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடைக்கு பிறகு காய்ந்த சருகுகளை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நிலத்தில் சருகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியுள்ளது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

காற்று மாசு குறியீ்ட்டின் அளவு உச்ச அளவை தொட்டுள்ளது. இந்த ஆண்டில் முதல்முறையாக இதுபோன்ற மோசமான, நெருக்கடியான நிலையை அடைந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும 5-ம் தேதிவரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப்பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விவசாயிகள் வயல்வெளிகளில் சருகுகளை எரிக்காமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேச மாநிலம் பிலிபட்டில் தங்கள் நிலத்தில் காய்ந்த சருகுகளை எரித்த 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர பிரதேச போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதை ஏற்று அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பில்சாண்டா, நெரியா, அமரியா, புரண்பூர், செராமு, மதகோண்டா, ஜகனாபாத், பிலாஸ்பூர், காஜூரூலா உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது சருகுகளை எரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பஞ்சாப் அரசும் வயல்வெளியில் விவசாயிகள் சருகுகள் மற்றும் கழிவு பொருட்களை எரிக்க தடை விதித்து கண்காணித்து வருகிறது. பஞ்சாபில் இந்த சீசனில் நவம்பர் 1-ம் தேதி வரை வயல்வெளிகளில் காய்ந்த சருகுகளை 20,729 பேர் எரித்ததாக தெரிய வந்துள்ளது, இதுதொடர்பாக 2,923 விவசாயிகள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT