புதுடெல்லி
டெல்லியில் காற்று மாசு இன்று மக்கள் சுவாசிக்கச் சிரமம் ஏற்படுத்தும் அளவுக்கு அபாயக் கட்டத்தை எட்டியது. டெல்லி நகரம் முழுமையும் கடுமையான புகைமூட்டம் நிறைந்திருந்ததால், 32 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் தீபாவளிக்குப்பின் காற்றின் மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகியவற்றிலிருந்து விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்தபின் மீதமிருக்கும் கதிர்களை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லி வரை வந்து சேர்கிறது. இதுதவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப்பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் குறைந்து வருகிறது.
வழக்கமாக, காற்று தரக் குறியீடு, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் 'நல்லது', 51-100 புள்ளிகள் வரை இருந்தால் 'மனநிறைவு', 101-200வரை புள்ளிகள் இருந்தால் 'மிதமானது', 201-300 புள்ளிகள் இருந்தால் 'மோசம்', 301-400 வரை இருந்தால் 'மிக மோசம்', 401-500 புள்ளிகள் இருந்தால் 'மிகத்தீவிரம்',500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகத்தீவிரம் அல்லது நெருக்கடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இன்று டெல்லியில் காற்றுதரக் குறியீடு அனைத்துக்கும் மேலாக 625 புள்ளிகளைத் தொட்டு, அபாயக் கட்டத்தை நோக்கி நகர்ந்து.டெல்லி நகரில் நேற்று லேசான மழைக்குப்பின் சூழல் மாறும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இன்று நிலைமை நேற்றைக் காட்டிலும் மோசமாகி இருக்கிறது.
இதனால் வீட்டிலிருந்து மக்கள் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே நடமாடவும் என மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.காற்றில் நிலவும் நுண்துகள்களும் பிஎம் 10, பிஎம் 2.5 என்ற அளவில் இருப்பது மனிதர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.
மேலும், நாளை முதல் டெல்லியில் ஒற்றை, இரட்டைப் படை வாகனங்களை மாற்றி இயக்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதால், வாகனப்புகையின் அளவுகுறையும் என நம்பப்படுகிறது பள்ளிக்குழந்தைகளின் வாகனங்கள் சாலையில் ஓடினால் அதனால் புகை அதிகரிக்கும் என்பதால், பள்ளிகளுக்கு வரும் 5-ம் தேதி வரை விடுமுறை விட நொய்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுமானப்பணிகள் செய்யவும் 5-ம் தேதிவரை தடை வித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது
இதற்கிடையே டெல்லியில் இன்று காலை முதல் காற்று மாசு உச்சக்கட்டத்தில் இருந்ததால், டெல்லி விமானநிலையத்துக்கு வந்த 32 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " மோசமான வானிலை, ஓடுகளம் சரியாக தெரியாத அளவுக்கு புகை மறைத்திருத்தல் போன்ற காரணத்தால் 32 விமானங்கள் ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோ நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன" எனத் தெரிவித்தார்
ஐஏஎன்எஸ்