காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

காங்கிரஸ் ஆட்சியில் பிரணாப்முகர்ஜியையும், வி.கே.சிங்கையும் உளவுபார்க்க யார் உத்தரவிட்டது: சோனியாவுக்கு பாஜக கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரணாப் முகர்ஜியையும், ராணுவத் தலைவர் வி.கே.சிங்கையும் உளவுபார்க்க யார் உத்தரவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்களை மத்திய அரசு உளவுபார்ப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தநிலையில் அதற்குப் பதிலடியாக பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்

நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இஸ்ரேலைச் சேர்ந்த உளவு சாப்ட்வேர் பீகாசஸ் மூலம் இந்த பெயர் வெளியிடப்படாத நிறுவனங்கள் சில இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்ததாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் " பல்வேறு விஷயங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இருக்கிறது. இஸ்ரேல் மென்பொருள் மூலம் மோடி அரசு சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்கட்சித் தலைவர்களின் வாட்ஸ்அப்பை உளவு பார்ப்பதாக எழுந்துள்ள புகார் வெட்கக்கேடு, சட்டவிரோதமானது, அரசியமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது" எனத் தெரிவித்திருந்தார்

இதற்குப் பதிலடி தரும் வகையில் பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறுகையில், " காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் பேச்சுகள் உண்மைக்குப் புறம்பானவை, உள்நோக்கத்துடன் தவறாக வழிநடத்தக்கூடியவை. இதுபோன்ற தவறான பிரச்சாரங்களை, கருத்துக்களை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது. இது அரசின் மீதும், பாஜக தலைவர்கள் மீதும் அபாண்டமான, அவதூறு குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகும்.

வாட்ஸ்அப் விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறிவிட்டது. அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உளவுபார்க்க உத்தரவிடப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் விளக்கம் அளிக்க முடியுமா.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராணுவத்தலைவர் வி.கே.சிங் ஆகியோரை உளவுபார்க்கக் கூறி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஜன்பத் 10 சாலையில் இருப்போர் உத்தரவிட்டார்களா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலா ஆட்சியில் ஏராளமான புகழ்பெற்றவர்களை உளவுபார்த்தது தொடர்பாக எழுந்த சதித்திட்டத்தில் சோனியா காந்தி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதுபோலத் தெரிகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதற்குப் பதிலடி தரும்வகையில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஞ்சித்சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கருத்துப்பதிவிட்டுள்ளார்,

அதில், " பிரபலங்களை உளவுபார்க்க எந்த ஏஜென்சி பாகஸ் மென்பொருளை வாங்கியது. பிரதமரா அல்லது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அனுமதி அளித்தார்களா. பிரதமரும், நட்டாவும் பதில் அளிக்க வேண்டும். கடந்த மே மாதமே வாட்ஸ்அப் நிறுவனம் இதுதொடர்பாக மத்திய அரசிடம் எச்சரிக்கை விடுத்தும் அரசு ஏன் மவுனம் காத்தது. பாகஸ் மென்பொருளை வாங்கி அதிகாரிகளுக்கு எதிராகவும்,அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் எப்போது அரசு நடவடிக்கை எடுக்கப்போகிறது" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

பிடிஐ

SCROLL FOR NEXT