புதுடெல்லி
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் வாங்கப்பட்டுள்ள மின்சார வாகனங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு காற்று மாசு அளவைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மத்திய அரசுக்கு சொந்தமான எரிபொருளில் இயங்கும் 5 லட்சம் வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாற்றப்படும். படிப்படியாக இவை மாற்றப்படும். டெல்லியில் குளிர்காலங்களில் காற்று மாசின் அளவைக் குறைக்க மின்சார வாகனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
மின்சார வாகனங்கள் சுற்றுச் சூழலை பாதிக்காமல் இருப்பதுடன் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கவும் உதவும். டெல்லில் குளிர்காற்று மாசு என்பது நீண்ட காலமாக உள்ளது. காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த 15 ஆண்டுகளாக வெறும் ஆலோசனைகள் அளவிலேயே இருந்தன. ஆனால், பாஜக அரசு அமைந்த பிறகுதான் காற்று மாசைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.