டெல்லி வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

தமிழகம், உ.பி.யில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்: ஜெர்மன் பிரதமரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி


தமிழகம், உ.பி.யில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கலுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

அதேசமயம், தீவிரவாதம், அடிப்படைவாதத்தை எதிர்கொள்ள இந்தியா, ஜெர்மனி இருதரப்பு மற்றும் பன்முறை கூட்டுறவுடன் செயல்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லி வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கலுடன் பல்வேறு துறைகள் ரீதியான பேச்சுக்குப்பின் இந்த அறிவிப்பைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் நேற்று மாலை புதுடெல்லி வந்தார். அவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேதந்திர சிங் விமானநிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்தியா, ஜெர்மனி இடையே 5-வது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மன் பிரதமர் மெர்கல் வந்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஹைதராபாத் பவனில் பிரதமர் மோடியை ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் நீண்டநேரம் பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் இரு தலைவர்களும் கூட்டாக 5 அறிவிப்புகளையும், விண்வெளி, விமானப் போக்குவரத்து, கடற்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

அதன்பின் நடந்த நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியும், ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கலும் விளக்கம் அளித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

2022-ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம். குறிப்பாகத் தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த ஜெர்மனிக்கு இது பயனுள்ளதாக இருக்கும். தீவிரவாதம் மற்றும் அடிப்படை வாதத்தை எதிர்கொள்ள இருதரப்பும், பன்முக அளவில் இணைந்து செயல்பட்டுத் தீர்வுகாண உள்ளோம்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களுக்காக இந்தியாவும், ஜெர்மனியும் இனிவரும் காலத்தில் தொடர்ந்து இணைந்து செயல்படும். உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் பாதுகாப்புத் துறையில் ஆயுத தளவாட உற்பத்திக்கான ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதை ஜெர்மனி பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

பேட்டரி கார் தயாரிப்பு, ஸ்மார்ட் சிட்டி, ஆறுகளைத் தூய்மைப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், கடற்பகுதி மேலாண்மை, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றில் இரு தரப்பு நாடுகளும் கூட்டுறவுடன் செயல்பட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் பேசுகையில், " புதிய மற்றும் அதிநவீன தொழில் நுட்பத்துறைகளில் இந்தியாவுடன் ஜெர்மனி இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளோம். குறிப்பாக 5ஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற சவாலான துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்

, பிடிஐ

SCROLL FOR NEXT