புதுடெல்லி
டெல்லியில் காற்று மாசு இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை தொட்டு, நெருக்கடி நிலையை இன்று எட்டியுள்ளது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
காற்று மாசு குறியீ்ட்டின் அளவு உச்ச பட்சமாக நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளைத் தொட்டது. இந்த ஆண்டில் முதல்முறையாக இதுபோன்ற மோசமான, நெருக்கடியான நிலையை அடைந்தது. ஆனால், இன்று காலை நிலவரப்படி காற்று மாசின் அளவு 459 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும 5-ம் தேதிவரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப்பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளது.
காற்று தரக் குறியீட்டின்பட், 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் நல்லது, 51-100 புள்ளிகள் வரை இருந்தால் மனநிறைவு, 101-200வரை புள்ளிகள் இருந்தால் மிதமானது, 201-300 புள்ளிகள் இருந்தால் மோசம், 301-400 வரை இருந்தால் மிக மோசம், 401-500 புள்ளிகள் இருந்தால் மிகத்தீவிரம், 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகத்தீவிரம் அல்லது நெருக்கடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று நள்ளிரவு 582 புள்ளிகளைத் தொட்டு இன்று காலை முதல் டெல்லியில் 450 புள்ளிகளுக்கு மேல் இருந்து வருகிறது.
தொடர்ந்து 450 புள்ளிகளுக்கு மேல் காற்றின் மாசு 48 மணிநேரம் நீடித்தால், அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அரசு இருக்கிறது. அதாவது சரக்கு வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு, கட்டுமானப் பணிகள் நிறுத்தம், பள்ளிகளை மூட அறிவுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று காற்றின் மாசு அளவு உச்ச அளவை நெருங்கியதால், காலை நேரத்தில் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சிக்குச் செல்பவர்கள், உடற்பயிற்சி செல்பவர்கள் அதைப் புறக்கணித்தனர்.
மேலும் சாலையில் செல்வோர் பெரும்பாலான மக்கள் முகத்தில் முகமூடி அணிந்தும், சுவாச முகமூடி அணிந்தும் செல்கின்றனர். காலை 8.30 மணி அளவில் டெல்லியில் ஒட்டுமொத்த காற்று மாசின் அளவு 459 புள்ளிகளாக இருந்து, நேற்று 410 ஆக இருந்தது.
டெல்லியில் காற்றின் தரத்தைக் கண்காணிக்க 37 காற்று தர கண்காணிப்பு மையங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் 450 புள்ளிகளுக்கு மேல் காற்று மாசு பதிவாகி இருந்தது. டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்(487), வாசிர்பூர்(485), ஆனந்த் விஹார்(484), விவேக் விஹார்(482), கிரேட்டர் நொய்டா(480), நொய்டா(477), பரிதாபாத்(432) ஆகியவற்றிலும் காற்றின் தரம் மோசமாக இருந்தது.
பொதுவாகக் காற்றில் காணப்படும் நுண்துகள்கள் 2.5 மைக்ரோன் அளவுக்குக் குறைவாக இருந்தால் அவை மனிதன் சுவாசிக்கும் போது மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். அந்த அளவு மோசமாக காசியாபாத்தில் இருந்து வருகிறது
டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவர் அரவிந்த் குமார் கூறுகையில், " 22 மைக்ரோகிராம் கியூபிக் காற்றைச் சுவாசிப்பது என்பது ஒரு சிகரெட்டை புகைப்பதற்குச் சமம். அந்த வகையில் பிஎம் 2.5 அளவில் 700 முதல் 300 யூனிட் சுவாசித்தால் மக்களுக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆதலால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். குறிப்பாக ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை, சுவாசப்பிரச்சினை இருக்கும் மக்கள் மிகுந்த கவனமாக இருத்தல் அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்
குழந்தைகள் வேகமாகச் சுவாசிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பதால், குழந்தைகளின் உடல்நலன் குறித்துப் பெற்றோர் அனைவரும் கவலையடைந்துள்ளனர். மேலும், டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தற்காலிகமாக மூடவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று ஊடகங்களிடம் பேசிய துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா, " காற்று மாசு அதிகரிக்கும்போது, தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டு இதேபோன்ற சூழல் நிலவியபோது, பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை விடப்பட்டது" எனத் தெரிவித்தார்
இதற்கிடையே காற்று மாசில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு 50 லட்சம் மாஸ்க்குகளை இன்று காலை முதல் வழங்கி வருகிறது.
பிடிஐ