அவுரங்காபாத்
மகாராஷ்டிரா மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது தொடர்பாக சிவசேனா, பாஜக இடையே இழுபறியான சூழல் நீடித்து வரும் நிலையில், இரு கட்சியின் பிரச்சினை முடியும் வரை என்னை முதல்வராக நியமியுங்கள், விவசாயிகள் பிரச்சினையை நான் தீர்க்கிறேன் என்று விவசாயி அளித்த மனுவால் ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக,சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் சிவசேனா 56 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் வென்றன.
இரு கட்சிகளும் கடந்த 2014-ம் ஆண்டு வென்ற இடங்களைக் காட்டிலும் குறைவாகவே வென்றிருந்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை என்பதால், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்களவைத் தேர்தலின்போது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி மகாராஷ்டிரா அரசில் சமபங்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று உடன்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி பாஜக நடக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்கச் சம்மதம் தெரிவிக்கும் பாஜக, ஆட்சி அதிகாரத்தைச் சமபங்கு அதாவது, முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டுக்கொடுக்க தயாரில்லை. இதனால், இரு கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் சிறு கட்சிகளின் எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவை பெறத் தொடங்கினர்.
மேலும், பாஜக சார்பில் ஆட்சியில் சமபங்கு என்ற எந்த வாக்குறுதியும் சிவசேனாவுக்கு அளிக்கவில்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் பேசியது சிவசேனாவுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத்தலைவராக தேவேந்திர பட்நாவிஸ் தேர்வு செய்யப்பட்டு அடுத்த முதல்வராகப் பதவி ஏற்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அதிகாரத்தைச் சமபங்கு பிரித்துக்கொள்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால்,புதிய ஆட்சி அமைவதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில் பீட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அந்த மாவட்டத்தின் கேஜ் தாலுகாவில் உள்ள வடமவுலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீகாந்த் விஷ்ணு கடாலே சென்றார். ஆட்சியைச் சந்தித்து அவர் அளித்த மனுவால் ஆட்சியர் ஒருநிமிடம் அதிர்ந்துவிட்டார்.
அந்த மனுவில் "மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது, யார் முதல்வராக வருவது என சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே அதிகாரப்போர் நீடித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் விவசாயிகள் நிலையைக் கவனிக்க இருவரும் தயாராக இல்லை. தொடர் மழையால் மாநிலத்தின் ஏராளமான இடங்களில் பயிர்கள் நாசமடைந்து, விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளார்கள்.
சிவசேனா, பாஜக இரு கட்சிகளும் தங்களுக்கு இடையிலான அதிகாரப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும்வரை முதல்வர் பதவியை என்னிடம் வழங்குங்கள். நான் விவசாயிகள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன். அதற்கு ஆளுநரிடம் பரிந்துரை செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் வேறு ஏதும் கூறாமல் விவசாயி ஸ்ரீகாந்தை அனுப்பிவைத்தார். தான் அளித்த மனு குறித்து ஸ்ரீகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், " மாநிலத்தில் பெய்த காலம் தவறிய மழையால் ஏராளமான மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வீணாகி, விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளார்கள்.
விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்கிறேன் என்று கூறி வாக்குகளைப் பெற்றுவிட்டு பாஜக, சிவசேனா கட்சியினர் இருவரும் யார் ஆட்சிக்கு வருவது தொடர்பாக போட்டி போடுகிறார்கள். விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க அக்கறையில்லை. ஆதலால், இரு கட்சியினருக்கும் இடையே பிரச்சினையைத் தீர்க்கும் வரை முதல்வர் பதவியை என்னிடம் கொடுங்கள், நான் விவசாயிகள் பிரச்சினையைத் தீர்த்து நீதி வழங்குகிறேன் என்று மனு அளித்தேன். என்னுடைய மனுவுக்கு உரிய பதில் அளிக்காவிட்டால், ஜனநாயக முறைப்படி நான் போராட்டம் நடத்துவேன்" எனத் தெரிவித்தார்
பிடிஐ