இந்தியா

மகாராஷ்டிர ஆளுநருடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு

செய்திப்பிரிவு

மும்பை

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட சிவசேனா தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.

ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் தற்போது 105 இடங்கள் மட்டுமே இருப்பதால் சிவசேனா ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா வலியுறுத்துகிறது. இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் மகாராஷ்டிர மாநில சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஏக்னாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டார்.

ஆதித்ய தாக்கரே துணை முதல்வராக பதவி ஏற்க ஏதுவாக அவர் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஏக்னாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட முக்கிய சிவசேனா தலைவர்கள் இன்று மாலை மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து பேசினர்.

அப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிதியுதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக சிவசேனா தலைவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT