புதுடெல்லி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதன் ரகசியம் என்ன, ஏதேனும் ரகசிய ஆப்ரேஷனில் ஈடுபடுகிறாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் ஹரியாணா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கம்போடியா நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார்.
இதனிடையே நவம்பர் மாதத்தில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து 15 நாட்கள் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த சூழலில் தியானப் பயிற்சிக்காக இந்தோனேசியாவுக்கு ராகுல் காந்தி சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இப்போதெல்லாம் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 16 முறை வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் அமேதிக்கு பயணம் செய்ததைக் காட்டிலும், ராகுல் காந்தி வெளிநாட்டுக்குத்தான் அதிகமாகப் பயணித்துள்ளார். அமேதி மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்தமைக்கு இதுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
ராகுல் காந்தி 16 முறை மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களில் 9 முறை அவர் எந்த நாட்டுக்குப் பயணித்தார் என்ற விவரங்கள் யாருக்கும் தெரியாது. ராகுல் காந்தி தனது வெளிநாட்டுப் பயணத்தை ஏன் வெளியிட விரும்புவதில்லை. ராகுல் காந்தி ஏதேனும் ரகசியமான நடவடிக்கையில் ஈடுபடுகிறாரா?
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கடந்த ஜூலை 3-ம் தேதி எழுதிய கடிதத்தில் எம்.பி.க்கள் யாரேனும் வெளிநாடு சென்றால் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விதிமுறைப்படி செல்லவும் எனக் கேட்டிருந்தார். ஒருவேளை தனிப்பட்ட பயணத்துக்காகக் கூட எம்.பி.க்கள் வெளிநாடு சென்றால்கூட தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் கேட்டிருந்தார்.
ஆனால், ராகுல் காந்தி தனது பயணம் குறித்து இதுவரை மக்களவை செயலாளருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. உலகின் ஒட்டுமொத்த மக்களும் தியானம் செய்ய இந்தியாவுக்கு வருகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்.
வெளிநாட்டுப் பயணம் என்பது செலவு குறைவானது அல்ல. ஏராளமான பணம் செலவாகும். ராகுல் காந்தியின் பயணத்துக்கு யார் செலவு செய்கிறார்கள், யார் பணம் செலுத்துகிறார்கள். குறிப்பாக விமான டிக்கெட், தங்குவதற்கான 5 நட்சத்திர ஹோட்டல், மற்ற செலவுகளை யார் செலவு செய்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்''.
இவ்வாறு நரசிம்மராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிடிஐ