ஸ்ரீநகர்
புதிதாக உருவாகிய சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல், முர்முவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கி, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது.
இதில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும். இரு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இன்று முதல் வந்துள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக ஆர்.கே.மாத்தூர் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
திசூரு நகரில் உள்ள சிந்து சமஸ்கிருத அரங்கில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அவருக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஜுகர் கிஷோர், மாநிலங்களவை எம்.பி.க்கள், பிடிபி கட்சி உறுப்பினர் நசீர் லாவே உள்ளிட்ட 250 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் கிரிஷ் சந்திர முர்முவுக்கு தலைமை நீதிபதி கீதா மிட்டல் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 1985-ம் ஆண்டு குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.ஏ. முதுநிலைப் பட்டதாரியான முர்மு, பொதுச்சேவையில் நிபுணத்துவம் பெற்றவர், மேலும், அரசியல் அறிவியல் பிரிவிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முர்மு பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது அவருடன் நெருக்கமாகப் பணியாற்றவர். அப்போது முதன்மைச் செயலாளராகவும் முர்மு இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ