இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா : கோப்புப்படம் 
இந்தியா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்

செய்திப்பிரிவு

கொல்கத்தா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான குருதாஸ் குப்தா உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் இன்று காலமானார். அவருக்கு வயது 83.

குருதாஸ் குப்தாவின் 84-வது பிறந்த நாள் வரும் நவம்பர் 3-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த குருதாஸ் குப்தா கடந்த சில ஆண்டுகளாகச் சிறுநீரகப் பிரச்சினை, இதயநோய் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

இதுகுறித்து மேற்கு வங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஸ்வபன் பானர்ஜி கூறுகையில், "குருதாஸ் குப்தா இன்று காலை 6 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள அவரின் இல்லத்தில் உயிரிழந்தார். சிறுநீரகக் கோளாறு, இதயநோய், தொண்டைப் புற்றுநோயால் அவதிப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். உடல்நலக் குறைவு காரணமாகக் கட்சியில் எந்தவிதமான பதவியும் வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். அதேசமயம் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்து வந்தார்" எனத் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்த குருதாஸ் குப்தா கடந்த 1964-ம் ஆண்டு கட்சி பிளவுபட்டபோதுகூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பக்கம் செல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தொடர்ந்து இருந்தார்.

தொழிலாளர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் ஆதரவாக பல்வேறு போராட்டங்களை, கடந்த 1970களில் நடத்திய குருதாஸ் குப்தா, தொழிலாளர் பிரிவின் தலைவராகவும் இருந்தார். கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக மாநிலங்களவை எம்.பி.யானார். கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குருதாஸ் குப்தா போட்டியிடவில்லை.

நாடாளுமன்றத்தில் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய குருதாஸ் குப்தா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் போது, கவனிக்கப்படக் கூடிய தலைவராக இருந்தார். இவரின் பேச்சுத்திறன் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் பாராட்டும் வகையில் இருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறுகையில், "மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் குருதாஸ் குப்தா. சாமானிய மக்களுக்காக உழைத்த முக்கியத் தலைவர். அவரின் மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கத்துக்கு இழப்பு" எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்த இரங்கல் செய்தியில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா மறைவு வேதனையளிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொழிலாளர் பிரிவு தலைவராகவும் அவர் தேசத்துக்கு ஆற்றிய பணிகள் முக்கியமானவை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

SCROLL FOR NEXT