லே
நாட்டின் புதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் இன்று உதயமாகின. லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூர் பதவியேற்றுக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கி, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது.
இதில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும். இரு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இன்று முதல் வந்துள்ளது.
இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில நிர்வாகம் விதித்தது.
தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் சேவை, நாளேடுகள், ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு போன்றவை கொண்டுவரப்பட்டதால் மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர். அரசியல் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் உத்தரவு சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான இன்று நடைமுறைக்கு வந்தது. இரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திர முர்முவும், லடாக்கிற்கு முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூரும் துணை நிலை ஆளுநர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி, லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ஆர்.கே.மாத்தூர் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். திசூரு நகரில் உள்ள சிந்து சமஸ்கிருத அரங்கில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அவருக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 1977-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மாத்தூர் திரிபுராவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி கல்வி நிறுவனத்தில் பயின்ற மாத்தூர், கடந்த 2015-ம் ஆண்டு பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் அந்த ஆண்டு டிசம்பர் மாதமே தலைமைத் தகவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டு பின் இப்போது துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைநிலை ஆளுநருக்கு ஆலோசகராக 1989-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான உமாங் நருலாவை நேற்று இரவு மத்திய அரசு நியமித்துள்ளது.
மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தின் காவல்துறைத் தலைவராக 1995-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.கான்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிடிஐ