இந்தியா

வறுமை குறித்து புத்தகத்திலிருந்து அறியவில்லை ரயில்வே பிளாட்பாரத்தில் தேநீர் விற்றேன்: சவுதியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

செய்திப்பிரிவு

ரியாத்

நான் அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தை சார்ந்தவன் அல்ல. மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்டவன். நான் ரயில்வே பிளாட்பாரத்தில் தேநீர் விற்றுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறை பயணமாக டெல்லியில் இருந்து கடந்த 28-ம் தேதி சவுதி அரேபியா சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ரியாத் நகரில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்னெடுப்பு என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதைத்தொடர்ந்து, அங்கு நடைபெற்ற கேள்வி பதில் அமர்வு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நான் எந்த பெரிய அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தையும் சார்ந்தவன் அல்ல. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவன் நான்.

வறுமை குறித்து எந்தப் புத்தகத்திலிருந்தும் நான் கற்றுக் கொள்ளவில்லை. நான் வறுமை யில்தான் வாழ்ந்தேன். ரயில்வே பிளாட்பாரத்தில் தேநீர் விற்ற நான் தற்போது இந்த இடத்தை அடைந்துள்ளேன்.

இன்னும் சில ஆண்டுகளில், வறுமையை ஒழிப்பதில் இந்தியா வெற்றி பெறும் என்று நம்புகிறேன். வறுமைக்கு எதிரான எனது போராட்டம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதாகும்.

ஒரு ஏழை நபர் தனது வறுமையை தானே ஒழிப்பதாக கூறுவதை விட பெரிய திருப்தி எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன். ஏழைகளுக்கு கண்ணியத்தையும், அதிகாரத்தையும் அளிப்பது மட்டுமே எங்களின் நோக்கம்.

கழிப்பறைகளை கட்டிக் கொடுத்தல், வங்கி கணக்கு திறந்து கொடுத்தல் உள்ளிட்ட செயல் களால் இந்தியாவில் ஏழைகளுக் கும் அதிகாரம் அளிக்கப்பட்டு அவர் களின் தகுதியும் உயர்த்தப்பட் டுள்ளது. இந்தியாவில் ஒரு மாற்றம் ஏற்பட்டால், இது உலகம் முழுவதும் பிரதிபலிக்கும்.

இந்தியாவை நாங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாகவோ, அல்லது வறுமை ஒழிந்த நாடாகவோ மாற்றும் போது, உலகத்தின் பார்வையும் மாறும். அது எங்களுக்கு திருப்தியை அளிக்கும். உலகத்தை மேம்படுத்துவதற்கு நாங்களும் பங்களிப்பு செய்கிறோம் என்ற உணர்வை தரும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT