முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம் 
இந்தியா

பட்னாவிஸ் கருத்தால் சந்திப்பை ரத்து செய்தார் உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிர அரசியலில் திடீர்த் திருப்பம்

செய்திப்பிரிவு

மும்பை

மகாராஷ்டிரா அரசில் சமபங்கு தருவதாக சிவசேனாவிடம் எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதைத் தொடர்ந்து இன்று மாலை அவருடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீரென ரத்து செய்தார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக,சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் சிவசேனா 56 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் வென்றன.

இரு கட்சிகளும் கடந்த 2014-ம் ஆண்டு வென்ற இடங்களைக் காட்டிலும் குறைவாகவே வென்றிருந்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை என்பதால், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரச்சினை அங்குதான் உருவானது. மக்களவைத் தேர்தலின்போது கூட்டணி குறித்த பேச்சில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி நடக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார். அந்த வாக்குறுதியின்படி மகாராஷ்டிரா அரசில் சமபங்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று உடன்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி பாஜக நடக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவிக்கும் பாஜக, ஆட்சி அதிகாரத்தைச் சமபங்கு அதாவது, முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டுக்கொடுக்க தயாரில்லை. இதனால், இரு கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் சிறு கட்சிகளின் எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவை பெறத் தொடங்கினர்.

இதனால், மகாராஷ்டிராவில் எளிதாக பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வந்து 5 நாட்கள் ஆகியும் இழுபறி நீடித்து வருகிறது.

தங்களின் நிலைப்பாட்டில் பிடிவாத இருந்து வரும் சிவசேனா கட்சி ஆட்சியில் 50 சதவீதம் பங்கை அளிக்க வேண்டும் என்று பாஜகவிடம் கூறி வருகிறது. ஆனால் பாஜக தரப்பில் எந்தவிதமான பதிலும் இல்லை. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு உருவாகும் சூழல் நிலவியது.

இந்த நிலையில், முதல்வர் பட்நாவிஸ் இன்று அளித்த பேட்டி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருக்கிறது. பட்னாவிஸ் அளித்த பேட்டியில் " சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை அளிப்பதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. பாஜக தலைவர் அமித்ஷா, உத்தவ் தாக்கரே பேசியிருக்கலாம். எனக்குத் தெரியாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான்தான் முதல்வர்" என்று பேசி இருந்தார்.

ஆனால், இன்று மாலை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், உத்தவ் தாக்கரேயும் சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்து பேச திட்டமிட்டு இருந்தார்கள். முதல்வர் பட்நாவிஸின் பேச்சால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே திடீரென பட்னாவிஸுடனான சந்திப்பை ரத்து செய்துள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெளியே தெரியத்தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா தலைவர் ஒருவர் கூறுகையில், " இன்று மாலை முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பூபேந்திர யாதவ் ஆகியோர் ஆட்சி குறித்து கலந்து பேச திட்டமிட்டு இருந்தார்கள். சிவசேனா தரப்பில் உத்தவ் தாக்கரே செல்லாவிட்டால், சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவத் செல்வதாக இருந்தது. ஆனால், பட்நாவிஸ் பேசிய கருத்தால், உத்தவ் தாக்கரே சந்திப்பை ரத்து செய்துவிட்டார். பட்நாவிஸ் இதுபோன்ற கருத்துக்களை பேசும் போது கவனத்துடன் பேச வேண்டும். அவரின் பொறுப்புக்களை உணர்ந்து பேசுவது அவசியம்" எனத் தெரிவித்தார்.

இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறியும், சிவசேனா, பாஜக இடையே மோதல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

, பிடிஐ

SCROLL FOR NEXT