காஷ்மீருக்கு சென்ற ஐரோப்பியயூனியனைச் சேர்ந்த 23 எம்.பி.க்கள் : படம் ஏஎன்ஐ 
இந்தியா

காஷ்மீரில் மோதல், கடையடைப்பு: பலத்த பாதுகாப்புடன் களநிலவரத்தை ஆய்வு செய்யும் ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள்

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் களநிலவரத்தை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 23 எம்.பிக்கள் இன்று சென்ற போது, பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன, மக்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும், 370-ம் பிரிவையும் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காஷ்மீர் நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது, மேலும் அமெரிக்க செனட்டருக்கும் காஷ்மீருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியா வந்துள்ளனர்.

பிரதமர் மோடியை நேற்று இந்த 27 எம்.பி.க்களும் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட தேசத்தின் அனைத்துப்பகுதிகளையும் பார்வையிடும் எம்.பி.க்களின் பயணம் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் 27 எம்.பி.க்களுக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இன்று எம்.பிக்கள் அனைவரும் காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், 27 எம்.பி.க்களில் 4 எம்.பிக்கள் எந்தவிதமான காரணங்களையும் கூறாமல் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 23 எம்.பி.க்களும் இந்று காலை ஸ்ரீநகர் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, குண்டு துளைக்காத ஜீப்புகளில் அமரவைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டல்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரு நாட்கள் பயணமாக வந்துள்ள ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் அங்குள்ள சூழலை விளக்க உள்ளனர். இவை தவிர காஷ்மீரின் களநிலரவரத்தையும் அந்த எம்.பி.க்கள் ஆய்வு செய்து, மக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்க உள்ளார்கள்.

ஆனால், ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் இன்று வந்திருந்த நேரத்தில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீநகர், டவுன்டவுன், 90அடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்ளில் இருந்த கடைகள்அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், சாலையில் பேருந்துகளும் செல்லாமல் வெறிச்சோடி இருந்தது.

சாலைகளில் கடைகளை அமைத்திருந்த சிறு வியாபாரிகளும் தங்கள் கடைகளை எடுத்துக்கொண்டு திரும்பி்ச்சென்றனர். காஷ்மீரில் தற்போது 10-ம் வகுப்புத் தேர்வு நடந்து வருவதால், பள்ளிகளுக்கு வெளியே பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல காத்திருந்தனர்.

பிடிஐ

SCROLL FOR NEXT