இந்தியா

2010-ல் அயோத்தி தீர்ப்பு வெளியானபோது; ஒற்றுமை நிலவ கட்சிகள் முக்கிய பங்கு வகித்தன: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

கடந்த 2010-ல் அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, ஒற்றுமை நிலவ அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் முக்கியப் பங்கு வகித்தன என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

அகில இந்திய வானொலியில், மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:நாட்டு மக்களுக்கு வணக்கம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளியன்று பெண் சக்தி மற்றும் அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம் என கடந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தேன்.

இதற்காக, ஏராளமான பெண்களைப் பற்றிய சாதனைக் கதைகள் வந்து குவிந்துள்ளன. இவற்றையெல்லாம் நீங்கள் படித்துப் பாருங்கள். அவை உங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். நவம்பர் 12-ம் தேதி குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அவர் ஏற்படுத்திய தாக்கம் இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் பரவி காணப்படுகிறது. இந்த தருணத்தில் குருநானக் தேவுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் 31-ம் தேதி நம் நாட்டின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள். நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் என்ற வகையில், பல்வேறு சமஸ்தானங்களை நம் நாட்டுடன் இணைத்தவர் அவர்தான். அவரது நினைவைப் போற்றும் வகையில், குஜராத் மாநிலத்தில் பிரம்மாண்டமான அளவில் ஒற்றுமை சிலை கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த சிலையை ஓராண்டில் 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர். நீங்களும் அந்த சிலையை சென்று பாருங்கள்.

அயோத்தி ராம்ஜென்மபூமி நிலப் பிரச்சினை வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த காலகட்டத்தை சற்று நினைத்துப் பாருங்கள். தீர்ப்பு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு என்ன மாதிரியான சூழல் நிலவியது? இந்த சூழ்நிலையை சில குழுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயன்றன. பல்வேறு பொறுப்பற்ற கருத்துகளைக் கூறி சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயன்றனர். ஆனாலும், இவையெல்லாம் சுமார் 5 முதல் 10 நாட்கள் வரைதான் நீடித்தன. தீர்ப்பு வெளியானபோது, ஆச்சரியமான மாற்றம் நாடு முழுவதும் உணரப்பட்டது.

ஒருபுறம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சித்த நிலையில், தீர்ப்பு வெளியானவுடன், அப்போதைய அரசு, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமுதாயம், அனைத்து மத பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நிதானமாக, நடுநிலையான கருத்துகளை தெரிவித்தனர். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த நாட்கள், நம் அனைவருக்கும் நமது கடமையை நினைவுபடுத்துகின்றன.

ஒற்றுமை நம் நாட்டுக்கு எத்தனை பலம் அளிக்கிறது என்பதற்கு உதாரணமாக அந்த நாட்கள் விளங்கின. அப்போது நாட்டு ஒற்றுமைக்காக பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி. வரும் 31-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் ஆகும். நம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த நாள். அவரது நினைவு நாளை முன்னிட்டு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT