இந்தியா

வீட்டுச் சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய பரூக் அப்துல்லா: வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்

வீட்டுக்காவலில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா 82-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்பப்பெற்றது மத்திய அரசு. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அமைதி நிலவ தொடங்கியதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கடந்த 21-ம் தேதி தனது 82 வது பிறந்தநாளை கொண்டாடினார். வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். வீட்டுச் சிறையில் இருப்பதால் தொண்டர்கள், மாற்று கட்சியினர் என யாரும் பரூக் அப்துல்லாவை பார்க்க முடியவில்லை. முக்கிய நிர்வாகிகள் உட்பட ஒரு சிலர் மட்டுமே பரூக் அப்துல்லாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

எனினும், அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தை நேரடியாக பரூக் அப்துல்லாவிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அந்த கடிதத்தில் பரூக் அப்துல்லா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், நாட்டிற்கு சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT