பஞ்சாப் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் சிலைகள். 
இந்தியா

பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு பாரத் ரத்னா: பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்திய விடுதலை போராட்ட தியாகிகளான பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டுமென பிரதமரிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

பாஜகவின் மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையில், 'சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் சாவர்க்கருக்கு அளிக்கப்படும் இந்த விருது மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே சார்பாக அளிக்கப்பட வேண்டும், ஏனெனில் சாவர்க்கர்தான் காந்தியைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி இன்று மூவருக்கும் பாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு முறையாகக் கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மணீஷ் திவாரி ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

''பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இடைவிடாத எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இறுதியாக மார்ச் 23, 1931 அன்று அவர்களின் உச்சபட்ச உயிர்த் தியாகத்தையும் செய்தனர். ஒரு முழு தலைமுறை தேசபக்தர்களை ஊக்கப்படுத்தியவர்கள் அவர்கள்.

விடுதலைப் போராட்டத் தியாகிகளான பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு பிரதமர் பாரத ரத்னா வழங்க வேண்டும். இதுகுறித்து பிரதமருக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. பகத்சிங்கின் நினைவாக சண்டிகர் விமான நிலையத்தை அவரது பெயரில் அர்ப்பணிக்க வேண்டும்.

ஜனவரி 26, 2020 அன்று, அந்த மூன்று தியாகிகளுக்கும் ஷாஹீத் அஸாமின் மரியாதையுடன் பாரத ரத்னா மூலம் கவுரவித்தால் அது தகுதிவாய்ந்த ஒரு செயலாக இருக்கும். இந்தப் பணி 124 கோடி இந்தியர்களின் இதயங்களையும் ஆன்மாவையும் தொடும்’’.

இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT