நொய்டா,
நொய்டாவிலும் கிரேட்டர் நொய்டாவிலும் நம்பர் பிளேட்டுகளில் சாதிப் பெயர்கள் கொண்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு உத்தரப் பிரதேச மாநிலப் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.
டெல்லி அருகே உள்ள நொய்டா நகரம் உத்தரப் பிரதேச மாநில எல்லைக்குள் வருகிறது. இந்நகரத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும்பாலும் வாகன ஓட்டிகள் தங்கள் சாதிப் பெயரைப் பறைசாற்றுவதற்காக இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் சாதிப் பெயரைத் தீட்டிக்கொண்டு வலம் வருவதைக் காண முடியும். ஆனால் இது சட்டவிரோதமான செயல் என்று கருதிய உ.பி.போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.
நேற்று தீபாவளி முன்னிட்டு கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசல்களுக்கு இடையே இருசக்கர வாகனங்களும் வந்தன. கவுதம் புத்தா நகர் முழுவதும் மாவட்டக் காவல்துறையின் ‘ஆபரேஷன் க்ளீன்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொந்தரவில்லாத போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் குற்றங்கள் ஏற்படாமல் இருக்க தீவிரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த 133 வாகனங்கள், சாதி கருத்துகள் அல்லது அது தொடர்பாக சவால் விடுக்கும் சொற்களைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தோம். இதில் நகர்ப்புறங்களில் 100 மற்றும் கிராமப்புறங்களில் 33 வாகனங்கள் ஆகும்.
இதுமட்டுமின்றி ஆக்ரோஷமான கருத்துகள் தாங்கிய 91 வாகனங்களும் இருந்தன. இதில் 78 நகர்ப்புறத்தைச் சேர்ந்தவை என்றும் 13 கிராமப்புறங்களைச் சேர்ந்தவை என்றும் கண்டறியப்பட்டன. இத்தகைய சாதிப்பெயர்கள் மற்றும் ஆக்ரோஷக் கருத்துகள் தாங்கிய வாகனங்களின் வண்டி எண்களைப் பதிவுசெய்துகொண்டு அபராத சலான்கள் வழங்கப்பட்டன. மேலும், நம்பர் பிளேட்டுகளை சேதப்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன.
தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு பாதுகாப்பு சோதனைகள் மற்றும் ரோந்துப் பணிகளை முடுக்கிவிட்டதால், முக்கிய நகைக் கடைகள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் சந்தைகளில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை காவல்துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பேசிய கவுதம் புத்தா நகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா கூறுகையில், "சாதிச் சொற்களை அல்லது நம்பர் பிளேட்டுகளில் ஆக்ரோஷமான கருத்துகளை எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தக் கூடாது. இத்தகைய எழுத்துகள் மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கி ஒரு தொல்லையாக மாறும்.
எனவே, அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் நாட்களிலும் இதேபோன்ற நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் இந்தச் சட்டத்தைப் பின்பற்றவும், தொந்தரவில்லாத இயக்கத்திற்கான போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்றவும் வேண்டும்.'' என்றார்.