சண்டிகர்
ஹரியாணா தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பாஜக – ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்கவுள்ளது. முதல்வராக மனோகர்லால் கட்டார் இன்று முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.
ஹரியாணாவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.
இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சி யான அகாலி தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் வென்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது.
ஹரியாணா லோஹித் கட்சி மற்றும் லோக்தளம் தலா ஓரிடத்திலும், சுயேச்சைகள் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதில் 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக முயன்றது.
சுயேச்சை எம்எல்ஏக்களில் 5 பேர் பாஜகவில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்கள் ஆவர். அவர்கள் பாஜகவை ஆதரிப்பதாக கூறினர்.
இதைத்தொடர்ந்து அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் இன்று காலை டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே திடீர் திருப்பமாக ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதலா, பாஜக அரசு அமைய ஆதரவளிப்பதாக அறிவித்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக தலைமை ஒப்புக் கொண்டது. இதையடுத்து அவர் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா ஹரியாணாவில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏகள் கூட்டம் சண்டிகரில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக முதல்வர் மனோகர்லால் கட்டார் முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார். அதன் பிறகு மீண்டும் ஆட்சியமைக்க கட்டார் உரிமைகோருகிறார்.