மங்களூரு இருதய நோய் மருத்துவர் டாக்டர் காமத். 
இந்தியா

நெய்வேலி இருதய நோயாளியைக் காப்பாற்றிய மங்களூரு மருத்துவரின் தொலைபேசி உதவி எண்

ரவிபிரசாத் கமிலா

மங்களூரு,

மங்களூருவைச் சேர்ந்த இருதய நோய் நிபுணர் பத்மநாப் காமத் என்பவரின் தொலைபேசி உதவி எண் தமிழகத்தின் நெய்வேலியில் ஒரு இருதய நோயாளியைக் காப்பாற்றியுள்ளது.

பத்மநாப் காமத் என்ற இருதய நோய் மருத்துவர் உதவி தொலைபேசி எண் (9743287599), மற்றும் வாட்ஸ் அப் கடந்த ஜூலை மத்தியில் பல்வேறு மருத்துவர்களுக்கும் உதவி செய்யும் பணியைத் தொடங்கியது. இதன் மூலம் அடிப்படை மருத்துவப் பட்டப்படிப்பு படித்த ஊரக மற்றும் புறநகர் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பலர் இவரது வாட்ஸ் அப் மூலம் பெரிய அளவில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.

உதவி தேவைப்படுபவர்கள் ஈ.சி.ஜி மற்றும் பிற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை டாக்டர் காமத் தொலைபேசி எண்ணுடைய வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி அவரிடம் நிபுணத்துவம் வாய்ந்த பயனுள்ள ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர். அது எந்த நேரமாக இருந்தாலும் என்பதுதான் இதில் அடங்கிய சிறப்பு.

இந்நிலையில்தான் கடந்த வியாழனன்று டாக்டர் காமத் தன் இல்லத்துக்கு ஒரு ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை முடிந்து அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பினார். அவர் உறங்கச் செல்லும் முன்பாக அவரது வாட்ஸ் அப் செயலியில் ஒரு செய்தி வந்தது.

நெய்வேலி என்.எல்.சி. பொதுமருத்துவமனையின் டாக்டர் கார்த்திகேயன் அனுப்பிய செய்திதான் அது. அதில் இருதய நோயாளி ஒருவரின் ஈ.சி.ஜி. ரிப்போர்ட்டை அனுப்பி காமத்திடம் ஆலோசனை கேட்டிருந்தார். "நோயாளி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, இந்த விஷயத்தில் சிகிச்சையில் உதவி தேவை என்று டாக்டர் கார்த்திகேயன் கேட்டிருந்தார்” என்று டாக்டர் காமத் தி இந்து (ஆங்கிலம்) இதழுக்குத் தெரிவித்த போது கூறினார்.

“நான் அந்த ஈ.சி.ஜியைப் பார்த்து விட்டு அதிகாலை 3.45க்கு ஆலோசனைகளை அனுப்பினேன். எங்கள் ஆலோசனைகளின் படி டாக்டர் கார்த்திகேயன் முதலுதவி செய்து அந்த நோயாளியை வசதிகள் நிரம்பிய வேறு மருத்துவமனைக்கு மாற்றினார். புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை மாற்றியதில் அவர் அபாயக் கட்டத்தைக் கடந்து விட்டார்” என்றார் டாக்டர் காமத்.

எம்.பி.பி.எஸ். பட்டதாரியான டாக்டர் கார்த்திகேயன் இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “டாக்டர் காமத் அவர்களின் ஆலோசனை பெரிய அளவுக்கு உதவியது. அவரது ஹெல்ப்லைன் குறிப்பாக கிராமப்புற, புறநகர் மருத்துவர்களுக்கு பெரிய உதவிகளைப் புரிந்து வருகின்றன” என்றார்.

டாக்டர் காமத்தின் எண்ணுக்கு தினசரி 10-20 கேள்விகள் ஆலோசனை கேட்டு வருகின்றன. இதுவரை சுமார் 2000 செய்திகள் ஆலோசனை கேட்டு வந்துள்ளன என்கிறார் டாக்டர் காமத். அதாவது நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் கிராமப்புறங்களில் புறநகர் பகுதிகளில் மருத்துவமனைகளில் இருதய நோய் நிபுணர்களின் பற்றாக்குறை தனது இந்த வாட்ஸ் அப் ஆலோசனைகள் ஓரளவுக்குப் பூர்த்தி செய்வதாக அவர் தெரிவித்தார். ஆனாலும், ‘இது நிபுணர்களுக்குப் பதிலீடு அல்ல, ஒரு இணைப்பு மட்டும்தான்’ என்கிறார் காமத்.

இந்த ஹெல்ப்லைன் மட்டுமல்லாது கர்நாடகா மருத்துவர்கள் சிலர் கொண்ட 3 வாட்ஸ் அப் குழுவையும் இதில் செயல்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ் அப் குழு சிஏடி (cardiology at doorstep)என்ற பெயரில் உள்ளது.

“இந்த ஹெல்ப்லைன் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் இருதயங்களையும் உயிர்களையும் இணைப்பது” என்கிறார் டாக்டர் காமத்.

SCROLL FOR NEXT