இந்தியா

காஷ்மீர் எல்லையில் பாக். குண்டு வீசி அத்துமீறல்: கிராமங்களில் வீடுகள் சேதம்

செய்திப்பிரிவு

குப்வாரா,

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் குண்டு வீசியதில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள கிராம மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன.

பாகிஸ்ரான் ராணுவம் இன்று காலை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப் பகுதி இந்திய கிராமங்கள் மீது சரமாரியாக குண்டு வீச்சில் ஈடுபட்டது.

இதில் மேற்கு குப்வாராவில் உள்ள தும்னா மற்றும் ரிடி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பலரின் வீடுகளும் சேதமடைந்தன. குண்டு வீச்சு சம்பவத்தில் உயிர் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

நேற்றும், குப்வாரா மாவட்டத்தின் டங்தார் துறையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்தத்தை மீறியது. முன்னதாக அக்டோபர் 20 அன்று, டங்தார் துறையில் பாகிஸ்தானால் தூண்டப்பட்ட போர் நிறுத்த மீறலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிராந்தியத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் கடும் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவத் தொடங்கியதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- ஏஎன்ஐ

SCROLL FOR NEXT