புதுடெல்லி
ஹரியாணாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 84 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு விழிப்புணர்வு அமைப்பான ஏடிஆர் நடத்திய ஆய்வில் கூறியுள்ளதாவது:
ஹரியாணாவில் கடந்த 2014-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 90 எம்.எல்.ஏ.க்களில் 75 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்தார்கள் தற்போது அந்த எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 84 பேர் கோடீஸ்வரர்கள்.
ஒரு எம்.எல்.ஏ.வின் சொத்துக்களின் எண்ணிக்கை சராசரியாக ரூ.18,29 கோடியாக உள்ளது. இது 2014ல் ரூ.12,99 கோடியாக இருந்தது.
தற்போதுள்ள 40 பாஜக எம்எல்ஏக்களில் 37 பேரும், 31 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 29 பேரும் கோடீஸ்வரர்கள். துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் செல்வந்தர்கள், அவர்களின் சராசரி சொத்துக்கள் ரூ.25.26 கோடி.
ஐம்பத்தேழு எம்.எல்.ஏக்கள் 41 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள், 62 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேல் படித்தவர்கள்.
90 எம்.எல்.ஏக்களில் 12 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர். கிரிமினல் வழக்கு உள்ளவர்களில் நான்கு பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், இருவர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜேஜேபியைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.