இந்தியா

பாஜகவில் இணைகிறார் என்டிஆர் மகள் புரந்தரேஸ்வரி: எல்.கே.அத்வானியுடன் இன்று சந்திப்பு

என்.மகேஷ் குமார்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் மகளும் முன்னாள் மத்திய அமைச்சருமான புரந்தரேஸ்வரி பாரதிய ஜனதா கட்சியில் சேர முடிவெடுத்துள்ளார்.

தனது தந்தையார் தொடங்கிய கட்சியான தெலுங்குதேசம் கட்சிக்கு முக்கிய எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர் புரந்தரேஸ்வரி. இவர் கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விசாகப் பட்டினம் தொகுதி யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் புரந்தரேஸ் வரி வியாழக்கிழமை விசாகப்பட்டி னத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தைப் பிரித்து சீமாந்திரா மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்து விட்டது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவுடனும் சீமந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியுடனும் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு சீமாந்திரா மக்களுக்கு அநீதி இழைத்து விட்டது.

சீமாந்திரா மக்களுக்கு இழைத்த கொடுமையால் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதோடு அரசியலில் இருந்தும் விலக முடிவு செய்திருந்தேன். ஆனால் பொதுமக்களும் எனது ஆதரவாளர்களும் தொடர்ந்து மக்கள் பணி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.

எனவே, வெள்ளிக்கிழமை டெல்லிக்கு சென்று பா.ஜ. மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்திக்க உள்ளேன். பின்னர் பாஜகவில் இணைவது குறித்து அறிவிப்பேன் என்றார்.

SCROLL FOR NEXT