மும்பை, பிடிஐ
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது, இதில் பாஜக, சிவசேனா கூட்டணி 158 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, இதில் பாஜக 100 இடங்களிலும் சிவசேனா 58 இடங்களிலும் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 103 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, இதில் பாஜக கடந்த தேர்தலைக் காட்டிலும் 27இடங்களை இழந்துள்ளது என்றே கூற வேண்டும், மாறாக காங்கிரஸ் 18 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளன, இது பெரிய தலைவர்கள் தாறுமாறாகப் பிரச்சாரம் செய்தும், கிளீன் ஸ்வீப் என்று பாஜக தலைவர்கள் மார்தட்டியதற்கும் மாறான ஒரு முடிவாகவே உள்ளது
பாஜக இழந்த 27 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களையும் சுயேட்சைகள் 8 இடங்களையும் விபிஏ 1 இடத்தையும் பிடித்துள்ளன.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா பெற்ற வாக்குகளினால் பெருமகிழ்ச்சியடைந்து பாஜகவுடனான அதிகாரப் பங்கீட்டை 50:50 என்று பிரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார்.
இந்த முறை 288 தொகுதிகளில் 126 இடங்களை சிவசேனாவுக்கு வழங்கியது பாஜக, ஆனால் தனக்கு 150 இடங்களை வைத்துக் கொண்டது. சிவசேனாவை திருப்தி செய்ய ஆதித்ய தாக்கரேயை துணை முதல்வராக்குவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே கூறும்போது, “பாஜகவுடனான அதிகாரப் பங்கீட்டில் 50:50 என்ற பார்முலாவை அமல் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது, லோக்சபா தேர்தல் சமயத்தில் என் இல்லத்துக்கு வருகை தந்த அமித் ஷா இந்த பார்முலாவுக்கு ஒப்புக் கொண்டார், அதை தற்போது அமல் செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது” என்றார்.
பாஜக கோரிக்கைக்கு இணங்கி குறைந்த சீட்களில் சிவசேனா போட்டியிட்டது, “எப்போதும் விட்டுக் கொடுத்தே போக முடியாது” என்றார் உத்தவ் தாக்கரே.