புதுடெல்லி
சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கனகபுரா தொகுதி எம்எல்ஏ டி.கே. சிவக்குமார். முந்தைய காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார். சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் செய்ததாக டி.கே. சிவக்குமார், ஹனுமந்தப்பா, கர்நாடக பவனில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தது.
இதுதொடர்பாக 3 முறை சிவக்குமாரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. கடந்த மாதம் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். சிவக்குமாரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் முன் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தி திஹார் சிறையில் அடைத்தனர். அவரை அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து அவரை போலீஸார் திஹார் சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கைது செய்யப்பட்ட சிவக்குமார் 50 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஜாமீன் கோரி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ் கெய்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிவக்குமார் வெளியே வருவதால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சிறையில் இருக்கும் சிவக்குமாரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். 25 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன் மற்றும் தனிநபர் ஜாமீனில் அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.