புதுடெல்லி
மேட்டூர் கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் ஆலையை நிரந்தரமாக மூட திமுக வலியுறுத்தி உள்ளது. அக்கட்சியின் தர்மபுரி தொகுதி எம்.பியான எஸ்.செந்தில்குமார், மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜாவ்டேகர் (சுற்றுச்சுழல்) மற்றும் சதானந்த கவுடா (ரசாயனத்துறை) ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று அளித்த தனது மனுவில் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:
கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் ஆலையில் கண்மூடித்தனமாக நச்சு வாயுவை வெளியிடப்பட்ட சம்பவத்தை அறிந்து தமிழக வருவாய்த்துறை அலுவலர்களால் கடந்த அக்டோபர் 13 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இதேபோன்று நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் வெளியேற்றப்பட்ட பல சம்பங்களால் அந்தப் பகுதியில் வாழும் ஏராளமான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நச்சுவாயு கசிவின் தொடர் சம்பவங்களால் கெம்பிளாஸ்ட் சன்மார், லிமிடெட் நிறுவனம் மேட்டூரின் குஞ்சந்தியூர் மற்றும் ராமன் நகர் பகுதிகள் நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றி வருகிறது.
நச்சு வாயுக்களை கண்மூடித்தனமாக வெளியிடுவதோடு கூடுதலாக, அபாயகரமான இரசாயன கழிவுகளை கொட்டுகின்றனர். இவற்றால், இனி பிறக்கப்போகும் குழந்தைகள் உள்பட நமது வருங்கால சந்ததியினரை அழிக்கும் மற்றொரு செயல்முறையாகும்.
கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் இந்த நச்சுத்தன்மையை விதைக்கும் செயல்களுக்கு மத்தியில் இங்குள்ள மக்கள் வாழ நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கண்காணிப்பு அமைப்புகளை சரிகட்டிவிடுகின்றனர்.
இதனால், சுற்றுப்புற கிராம மக்களின் நலன்களை புறக்கணிப்பதோடு, நிலத்தடி நீர், காற்று, காவிரி நதியையும் விஷமாக்கும் சூழல் நிலவுகிறது. கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட்டின் போக்கால் ஊனங்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் இளம் தலைமுறையினர்களுக்கு தீர்க்கவே முடியாத பிறவிக் கோளாறுகளைக் கொண்ட கிராமம் உருவாகிவிடும்.
கடந்த இரண்டு மாமாங்கமாக சல்பர் டை ஆக்சைடு வாயு மற்றும் அபாயகரமான ரசாயனம் கலந்த கழிவு நீரை வெளியேற்றிவருவதைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகமாகி உள்ளது. கெம்பிளாஸ்ட் சன்மார், லிமிடெட் நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு செய்தலும் தொடர்கதையாக உள்ளது.
இதேபோல் 2010-க்கு முன்பிருந்தே கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் மேற்குபகுதியில் உள்ள ஆலையில் எண் 3 இல் இருந்து வெளியேறும் பாதரசக் கழிவுகள் விஞ்ஞானமுறைப்படி இல்லை. அது, அபாயகரமான முறையில் திறந்தவெளி வடிகால்கள் மூலம் கீழே பூசப்படாத கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது.
இதனால், ஏற்படும் நிலத்தடி நீர் பாதிப்பை பூசி மெழுகும் வகையில் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற அபாயகரமான கிடங்குகளில் உள்ள கழிவுகளால் நிலத்தடி நீர் கடும் மாசு அடைவதோடு விளைநிலங்களையும் பாதிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 21-ன் கீழ் தூய்மையான சுற்றுச்சுழல் எனும் அடிப்படை உரிமை பொதுமக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. நெருக்கடிகளுக்கு விலைபோகாத ஐ.ஐ.டி மெட்ராஸ் போன்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிறப்பு சுற்றுச்சூழல் ஆய்வுக் குழு மூலம், சுற்றுச்சூழல் சேதங்கள் மதிப்பிடப்பட வேண்டும். இதை நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் செய்ய பரிந்துரைக்க வேண்டும்.
நிலத்தடி நீர் மாசுபட்ட மேட்டூர் கிராமங்களுக்கு நீர் வழங்குவது அரசின் முக்கிய கடமை. எனினும், கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் அடாவடியான போக்கை தமிழக அரசு தடுத்து நிறுத்த தவறிவிட்டது.
இந்நிலையில் அந்தப் பணியை தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் மேற்கொண்டு அதற்கான செலவீனங்களை மாசுக்கு காரணமான நிறுவனத்திடம் சுமத்த வேண்டும். காவிரி ஆற்றையொட்டி 5 கிமீ சுற்றளவில் 14 வகையான அதி அபாயகரமான மற்றும் கொடிய ரசாயன உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்கு 1998 ஆம் ஆண்டில் அரசு தடை விதித்தது.
இதை மீறும் வகையில் கடந்த 2000ஆம் ஆண்டில் மேட்டூரில் உள்ள கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஆகவே, மேட்டூர் தாலுகா போன்ற அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கேம்பிளாஸ்ட் சன்மர் லிமிடெட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், ஆலை நிர்வாகத்தின் செல்வாக்கு காரணமாக இதுபோன்ற நச்சுவாயு கசியும் பல சம்பவங்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என தன் மனுவில் புகார் செந்தில்குமார் புகார் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர், டிசம்பர் 7, 2007, ஜூலை 18, 2014, அக்டோபர் 13, 2012 என 2014 ஆம் ஆண்டு வரையில் ஏற்பட்ட சம்பவங்களை விவரித்துள்ளார்.