இந்தியா

திஹார் சிறைக்குச் சென்று சிவக்குமாரைச் சந்தித்தார் சோனியா காந்தி

செய்திப்பிரிவு

புதுடெல்லி

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தித்து இன்று சந்தித்துப் பேசினார்.

கர்நாடக மாநிலத்தின் கனகபுரா தொகுதி எம்எல்ஏ டி.கே. சிவக்குமார். முந்தைய காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார். சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் செய்ததாக டி.கே. சிவக்குமார், ஹனுமந்தப்பா, கர்நாடக பவனில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பாக 3 முறை சிவக்குமாரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. கடந்த மாதம் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். சிவக்குமாரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் முன் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தி திஹார் சிறையில் அடைத்தனர். அவரை அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து அவரை போலீஸார் திஹார் சிறையில் அடைத்தனர்.

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கைது செய்யப்பட்ட சிவக்குமார் 50 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திஹார் சிறைக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிவக்குமாரைச் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். சோனியா காந்தியுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோருடம் உடன் சென்றனர்.

SCROLL FOR NEXT