ஜம்மு
அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதத்துக்கு பலி கடா ஆக்கிவிட்டார்கள் என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டினார்.
ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சத்யபால் மாலிக் பேசியதாவது:காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பயன்படுத்தி இங்குள்ள அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் மாநிலத்தின் வளங்களையும், சொத்துகளையும் சுரண்டி வந்திருக்கின்றனர். சாதாரண காஷ்மீர் மக்களின் பிள்ளைகளை தீவிரவாத பாதைக்கு கொண்டு சென்று அவர்களின் வாழ்க்கையையும் சீரழித்துவிட்டனர்.
ஆனால், எந்தவொரு அரசியல்வாதி அல்லது பிரிவினைவாதத் தலைவரின் பிள்ளைகளும் தீவிரவாதத்தில் இணையவில்லை. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் படித்து அங்கேயே வசித்து வருகிறார்கள். இந்த உண்மையை காஷ்மீர் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தங்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்பதற்காக, உங்கள் வாழ்க்கையை அவர்கள் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி, காஷ்மீரை சேர்ந்த சுமார் 22 ஆயிரம் மாணவர்கள், வெளி மாநிலங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்புக்காக அவர்கள் ஏன் வெளி மாநிலம் செல்ல வேண்டும்? காஷ்மீரை இத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்த அரசியல்வாதிகள், தரமான கல்வி நிலையங்களை மாநிலத்தில் அமைக்காதது ஏன்? 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது.
இனியாவது காஷ்மீர் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். மாமன்னர் ஜஹாங்கீர் கூறியதுபோல, பூமியின் சொர்க்கமாக காஷ்மீர் உள்ளது. அதனை இப்போது உங்கள் கையில் மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இங்கு அமைதியையும், வளர்ச்சியையும் உருவாக்க உறுதியேற்றுள்ளது. இதனை காஷ்மீர் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியம். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியானது அதன் மக்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே விளங்குகிறது. எனவே, அரசு முன்னெடுக்கும் திட்டங்களில் இணைந்து, காஷ்மீரை இந்தியாவின் மகுடமாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு சத்யபால் மாலிக் பேசினார். - பிடிஐ