புதுடெல்லி, பிடிஐ
பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை 50%-க்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் வங்கியாளர்களிடத்தில் இருக்கும் அச்ச மனப்பான்மை விலகும் என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய அவர் இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பொதுத்துறை வங்கிகள் பற்றி கூறியதாவது:
வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் இது குறித்து கவலைப்பட வேண்டும். நாம் இன்னும் கூட விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருநாள் வங்கிகள் நன்றாக இருக்கின்றன, திடீரென நெருக்கடி ஏற்படுகிறது. நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாகவே அது ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
நமக்கு முக்கியமான வலுவான மாற்றங்கள் இந்த விஷயத்தில் தேவைப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை 51% க்கும் கீழே குறைத்தால் வங்கிகள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) பார்வையிலிருந்து விடுபடும்.
இவ்வாறு கூறினார் அபிஜித் பானர்ஜி.
அதாவது வாராக்கடன் விவகாரத்தில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணைகள் குறித்த அச்சம் வங்கியாளர்களை கடன் வழங்குவதிலிருந்து தடுத்து விடுகிறது என்று கூறுகிறார் அபிஜித் பானர்ஜி.