இந்தியா

டெல்லியில் ஸ்டிரைக் எனக் கூறி அமெரிக்கப் பயணியை ஏமாற்றிய கார் ஓட்டுநர்: ரூ.90,000 மோசடி செய்தவர் சிக்கினார்  

செய்திப்பிரிவு

புதுடெல்லி

அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு சுற்றுலா வந்த பயணியிடம் ரூ.90,000 ஏமாற்றிய கார் ஓட்டுநரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

கடந்த அக்டோபர் 18-ம் தேதி அமெரிக்கரான ஜார்ஜ் வேன்மீட்டர் டெல்லி வந்தார். அவர் தான் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த விடுதி அறைக்குச் செல்ல கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

ஆனால் அந்த கார் ஓட்டுநர் டெல்லியில் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கின்றன எனக் கூறியுள்ளார்.

பாஹர்ஞ்ஜ்ச் பகுதியில்தான் அந்த அமெரிக்க ஏற்பாடு செய்திருந்த விடுதி இருந்தது. அந்த விடுதியும் மூடப்பட்டுவிட்டதாகக் கார் ஓட்டுநர் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் அந்த அமெரிக்கர் கார் ஓட்டுநர் சொல்வதை நம்பவில்லை. ஆனால், கார் ஓட்டுநரோ பாஹர்கஞ்ச் பகுதி செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த போலீஸ் காவல் தடுப்புகளைக் காட்டி பண்டிகை காலத்திற்காக மூடப்பட்டிருக்கிறது எனக் கூறி நாம் வேறு பக்கம் செல்வோம் என்று சொல்லி கனோட் ப்ளேஸ் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு போலி சுற்றுலா மையத்துக்கு கூட்டிச் சென்று டெல்லி, ஆக்ராவில் தங்கும் விடுதிகளை புதிதாக ஏற்பாடு செய்து அதன் நிமித்தமாக ரூ.90,000 வசூலித்துள்ளார்.

பின்னர் அந்த அமெரிக்கர் ஆக்ரா சென்றுள்ளார். ஆக்ரா சென்றவுடன் அந்த அமெரிக்கர் தான் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த விடுதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது அறை ரத்தானதால் பணத்தைத் திருப்பியனுப்புமாறு கோரியுள்ளார்.

அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதையே உணர்ந்துள்ளார். இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே அவர் போலீஸில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த கிழக்கு சிங்கால் போலீஸார் கார் ஓட்டுநரை கைது செய்தனர். இதனை துணை கமிஷனர் உறுதி செய்தார்.

SCROLL FOR NEXT