புதுடெல்லி, பிடிஐ
மகாராஷ்ட்ராவில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், ஹரியாணாவில் பாஜகவுக்கும் மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளதாகவும் இரு மாநிலங்களிலும் பாஜக பெரிய வெற்றிகளைப் பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும் காங்கிரஸ் கட்சி படுதோல்விகளையே சந்திக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்துக் கணிப்புகள் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 288 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக-சிவசேனா கூட்டணி 166-194 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் வேளையில் காங்கிரஸ்-தேசியவாத ஜனநாயகக் கூட்டணிக்கு 72-90 இடங்களே கிடைக்கும் என்று கூறியுள்ளது.
நியூஸ் 18-ஐபிஎஸ்ஓஎஸ் கணிப்புகள் இன்னும் ஒருபடி மேலே போய் பாஜக மட்டுமே 142 இடங்களிலும் சிவசேனா 102 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும் என்சிபிக்கு 22 இடங்களும் என்று கூறுகிறது இந்தக் கணிப்பு.
ஏபிபி-சி-வோட்டர் கணிப்புகள்: பாஜக-சிவசேனாவுக்கு 204 இடங்களை வாரி வழங்கியுள்ளது இந்தக் கணிப்பு. காங்கிரஸ் -என்.சி.பி.க்கு 69 இடங்கள்.
ஹரியாணா:
இங்கும் பாஜகவுக்கு பெரிய வெற்றி என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
ஏபிபி-சி ஓட்டர் கணிப்பின் படி பாஜக 72 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
சிஎன்என் - ஐபிஎஸ்ஓஎஸ் கணிப்பின் படி பாஜக 75 இடங்கள், காங்கிரஸ் 10 இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு.
The poll of polls என்று அழைக்கப்படும் டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி, ஏபிபி நியூஸ், டிவி9 பாரத்வர்ஷ், நியூஸ் 18 ஆகியவற்றின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஹரியாணாவில் பாஜக 66 இடங்களிலும் காங்கிரச் 14 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு என்கிறது. மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 211 இடங்களிலும் காங்கிரஸ்-என்சிபி கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு என்று கூறுகிறது.