புதுடெல்லி
உலகத் தீவிரவாதத்தின் மையப்புள்ளியாகப் பாகிஸ்தான் இருப்பதால், இந்தியாவுக்கு மட்டுமே பிரச்சினையாக இல்லை, உலக நாடுகளுக்கே சவாலாக இருக்கிறது என்று பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியா, பாகிஸ்தான் உறவுகள், பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் நடக்குமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
பாகிஸ்தானுடனான நம்முடைய உறவுகள் கடந்த 70 ஆண்டுகளாக ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வந்துள்ளது. பாகிஸ்தானுடன் நட்புறவோடு இருப்பதைத்தான் இந்தியாவும் விரும்புகிறது. ஆனால், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை அந்த நாடு முதலில் நிறுத்த வேண்டும்.
இன்றைய சூழலில் இந்தியாவுக்கு மட்டும் பாகிஸ்தான் கடினமான உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. உலகில் பல நாடுகள் பாகிஸ்தானுடனான உறவில் பிரச்சினை இருப்பதாக உணர்கின்றன. குறிப்பாக அந்தநாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகவும், தேவையான உதவிகளையும் செய்வது உலக நாடுகளுக்குக் கவலையளிக்கிறது.
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துங்கள் என்று இந்தியாவுக்குப் பல நாடுகள் ஒருநேரத்தில் ஆலோசனை கூறின. ஆனால், இன்று எந்த நாடும் இந்தியாவிடம் சொல்வதில்லை. ஏனென்றால், உலகத்தீவிரவாதத்தின் மையப்புள்ளியாகப் பாகிஸ்தான் இருந்து வருகிறது.
இந்தியாவுக்கு மட்டும் பாகிஸ்தான் பிரச்சினையாக இருக்கவில்லை. உலகத்துக்கே சவாலாக இருக்கிறது. பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கான கட்டமைப்பு உலகத் தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக இருக்கிறது. ஜனநாயக உலகில் தீவிரவாதம் போன்ற சில முக்கியப்பிரச்சினை இருக்கிறது,
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், 370 பிரிவு நீக்கப்பட்டபின் பாகிஸ்தான் காஷ்மீர் குறித்துப் பேசிய விதம், உலகச்சமுதாயமே அந்த நாட்டை புறந்தள்ளிவிட்டன. பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டில் நடக்கும் விவகாரங்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை, ஆனால், அதற்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் கடமையாகும். ஆனால், அண்டை நாட்டில் இதுபோன்ற சூழல் நிலவுவது துரதிருஷ்டம்தான்
இவ்வாறு ராம் மாதவ் தெரிவித்தார்
பிடிஐ