ரோதக்
ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணிநேர நிலவரப்படி 8.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல்வர் கட்டார் சைக்கிளிலும், ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யத் சவுதாலா டிராக்டரிலும் வந்து வாக்களித்தனர்.
ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான அகாலி தளமும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
ஆட்சியமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக ஆட்சியை தக்கவைக்க தீவிரப் பிரச்சாரம் செய்துள்ளது. பிரதமர் மோடி உட்பட பாஜக மூத்த தலைவர்கள் வாக்கு சேகரித்துள்ளனர்.
இந்தத் தொகுதிகளில் 1,169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 105 பேர் பெண்கள். மாநிலத்தில் 1.83 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 16,357 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 75,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
அதுபோலவே ஜனநாயக ஜனதா கட்சித் தலைவரும், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனுமான துஷ்யந்த் சவுதாலா தனது குடும்பத்தினருடன் டிராக்டரில் வந்து வாக்களித்தார்.
மாநிலம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஓரிரு இடங்களில் மழை காரணமாக சற்று மந்தமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி 8.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.