ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீரில் அமைதி முயற்சியை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் யூனியன் பிரதேசமாகவும் மாற்றி உத்தரவிட்டது.
யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் உத்தரவு வரும் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில்,ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ்கூறியதாவது:
‘‘காஷ்மீரில் அனைத்து பணிகளும் ஒரு சில குடும்பங்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் லட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் இன்னமும் எந்த பயனையும் அடையாமல் போராட்டத்தில் வாழ்கின்றனர்.
காஷ்மீரை பொறுத்தவரையில் இனிமேல் இரண்டே பாதை தான். ஒன்று அமைதி மற்றொன்று வளர்ச்சி. இதற்கு இடையூறு செய்பவர்கள் கடுமையான நடவடிக்கையை சந்திப்பார்கள். அவர்களுக்காக இந்தியாவில் ஏராளமான சிறைகள் உள்ளன’’ எனக் கூறினார்.