ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டம், தாங்தர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் இன்று நடத்திய பீரங்கி தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 35 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நேற்று இரவிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார். காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியதையடுத்து, இந்திய ராணுவமும் பீரங்கி மூலமும், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தான் பகுதியிலிருந்த 7 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 4 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, இதில் ஹிஸ்பல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 35பேர் கொல்லப்பட்டார்கள். இந்தியத தரப்பில் நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலில் பாகிஸ்தான் பகுதியில் பலத்த சேதம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினர் 5 பேர் கொல்லப்பட்டார்கள்" எனத் தெரிவிக்கின்றன.
லடாக்கில் சீனாவின் எல்லைப் பகுதியில் இருக்கும் லே-காரக்கோரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவத் தளபதி பிபின் ராவத் இருவரும் நாளை திறக்க உள்ளார்கள். முன்னதாக இருவரும் நேற்று வந்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்துவிட்டுத் திரும்பினர். இதன்பின்தான் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது
, ஐஏஎன்எஸ்