நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சாரதா குழுமத்தினால் பயனடைந்தவர்களுக்கு சொந்தமான மேலும் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கையில் அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாரதா குழுமத்தின் நிதி முதலீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 4-வது அடுக்கு பயனாளிகளை கண்டறிந்துள்ளோம். எனவே, அந்தப் பயனாளிகளுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்மூலம் இந்த வழக்கின் கீழ் முடக்கப்படும் மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.1,100 கோடியாக அதிகரிக்கும்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் இதுவரை 4 முதல்நிலை குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இறுதி குற்றப்பத்திரிகையில் கைது செய்யப்படாதவர்களின் பெயர்கள் இடம்பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.