கொல்கத்தா
மேற்குவங்கத்தில் எல்லையருகே வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
மேற்குவங்க மாநிலம் முஷிர்தாபாத் மாவட்டத்தில் ரோஷர் என்ற கிராமத்தில் இருந்து 3 மீனவர்கள் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் மீனவர்கள் 3 பேரையும் சிறைபிடித்தனர்.
பின்னர் அவர்களில் 2 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து மீனவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்த படகில் சென்றனர்.
அப்போது திடீரென வங்கதேச வீரர்கள் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உடனடியாக அங்கு இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கதேசமும், இந்தியாவும் நேச நாடுகளாக இருப்பதால் பெரிய அளவில் மோதல் நடப்பதில்லை. ஆனால் திடீரென நடந்த மோதல் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
உயிரிழந்த வீரரின் பெயர் விஜய் பான் சிங். அவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.