இந்தியா

பொதுத்துறை வங்கிகளை வீணாக்கியவர் மோடி: ராகுல் காந்தி கடும் சாடல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

பொதுத்துறை வங்கிகளை வீணாக்கியவர் பிரதமர் மோடி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.

இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொருளாதார சுணக்கத்தை போக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. வங்கித்துறை சீரமைப்புக்காக பல்வேறு வங்கிகளையும் இணைக்கும் முடிவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘நரேந்திர மோடி பொதுத்துறை வங்கிகளை தனது சூட், பூட் போட்ட நண்பர்களுடன் சேர்ந்து வீணடித்தவர். இந்த நாட்டில் உள்ள பல பொதுத்துறை வங்கிகளும் பல ஆண்டுகளாக இந்த நாட்டின் உழைப்பில் உருவானவை.

ஆனால் இன்றே பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பயத்திலும், நிலையற்ற தன்மையாலும் அவதிப்படுகின்றனர். போராட்டம் நடத்தும் ஊழியர்களுடன் தோளோடு தோள் நிற்பேன்’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT