புதுடெல்லி
அயோத்தி வழக்கில் நிலவுரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 40 நாட்களாக நடந்து வந்த விசாரணை இன்று நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அயோத்தி ராம ஜென்ம பூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விரஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்குவது அவசியமாகும். இல்லாவிடில் ஒட்டுமொத்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
எனவே அக்டோபர் 18-ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்த குழு மூலம் மனுதாரர்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்குத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதேசமயம் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவித்தனர்.
இந்த வழக்கில் அக்டோபர் 18-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டமிட்டிருந்த நிலையில் 2 நாள் முன்கூட்டியே இன்று விசாரணை நிறைவு செய்யப்பட்டது. இந்து மகாசபா மற்றும் முஸ்லிம் தரப்பில் வழக்கறிஞர்கள் விகாஸ் சிங் மற்றும் ராஜீவ் தவான் ஆகியோர் தங்கள் வாதங்களை இன்று முன் வைத்தனர்.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை வாதம் தொடங்கியபோது, இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் விசாரணையை முழுமையாக நடத்த போதுமான கால அவகாசம் வேண்டும் எனக் கோரினர்.
ஆனால், அவர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நிராகரித்தார். போதும், இது போதும் எனக் கூறிய நீதிபதி, மாலைக்குள் விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.