பஞ்சாப் அன்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் (62), மதம் மாறி தனது உதவியாளருடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
பிஎம்சி வங்கி ரூ.4,355 கோடியை முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் தொடர்புடையதாக கருதப்படும் அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் தாமஸ் உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஜாயிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கெனவே திருமணமான ஜாய் தாமஸ், தனது உதவியாள ருடன் நெருங்கிப் பழகி வந் துள்ளார். இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு அந்தப் பெண் பணியிலிருந்து விலகினார். அப்போது, தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதன் பிறகு துபாய் செல்ல உள்ளதாக வும் சக ஊழியர்களிடம் தெரிவித் திருக்கிறார்.
ஆனால், ஜாயை திருமணம் செய்துகொண்டு அவர் புனே நகரில் மறைவாக வசித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை திருமணம் செய்வதற்காக ஜாய் இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை ஜுனைத் என மாற்றிக் கொண்டுள்ளார்.
மேலும் புனே நகரில் அந்தப் பெண் பெயரில் 9 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதை ஜாய் வாங்கிக் கொடுத்திருக்கலாம் என கருதுகிறோம். இந்த வீடுகளை வாங்குவதற்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதற்கும் வங்கி முறைகேடுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தால், அந்த சொத்துகளை முடக்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாமஸின் 2-வது திருமணம் பற்றிய தகவல் அறிந்த அவரது முதல் மனைவி, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
வாடிக்கையாளர் மாரடைப்பால் மரணம்
மும்பையில் ஆயிரக்கணக்கான பி.எம்.சி. வாடிக்கையாளர்கள் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையின் ஒஷிவாரா பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குலாட்டி (51) என்பவரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பி.எம்.சி. வங்கியில் ரூ.90 லட்சம் செலுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போராட்டம் நிறைவடைந்த சில நிமிடங்களிலேயே, சஞ்சய் மயங்கி விழுந்தார். பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். சஞ்சய், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். அண்மையில் அந்நிறுவனம் மூடப்பட்டதால் வேலையிழந்தார். இந்த சூழலில், தாம் வங்கியில் செலுத்திய பணமும் பிரச்சினைக்குள்ளாகியதால் மிகுந்த மனவேதனையில் அவர் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.