ஸ்ரீநகர்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதை பயன்படுத்தி பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளும், பிரிவினைவாதிகளும் காஷ்மீரில் கலவரம், வன்முறையைத் தூண்ட சதித் திட்டம் தீட்டினர்.
இதை தடுக்க 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டது. தொலைத் தொடர்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தரைவழி தொலை பேசி சேவை மீண்டும் தொடங்கப் பட்டது.
வீட்டுக் காவலில் வைக் கப்பட்டிருந்த தலைவர்கள் படிப் படியாக விடுவிக்கப்பட்டனர். கடந்த 9-ம் தேதி பள்ளி, கல்லூரி கள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் எஸ்எம்எஸ் மூலம் வதந்தி கள் பரப்பப்படுவதை அறிந்த போலீ ஸார், எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டும் நேற்று முன்தினம் மாலை தடை விதித்தனர்.
பரூக் அப்துல்லா சகோதரி கைது
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரயா, மகள் சோபியா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் உட்பட சிலரை போலீஸார் கைது செய்தனர். பிற்பகலில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.