இந்தியா

பசு தத்தெடுப்பு திட்டத்தில் ஆர்வம் காட்டாத உ.பி. மக்கள்

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க அவற்றை பொது மக்கள் தத்தெடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஆர்வம் காட்டாததால் லட்சக் கணக்கான பசுக்களில் பத்தாயிரம் மட்டுமே தத்தெடுக்கப்பட்டுள்ளன.

மத்தியில் பாஜக தலைமை யிலான ஆட்சி 2014-ல் அமைந்தது முதல் வட மாநிலங்களில் பசுக்களின் பாதுகாப்பு எனும் பெயரில் கும்பல் படுகொலைகள் நிகழ்வதாகப் புகார் உள்ளன. அதேசமயம், பசுக்களும், மாடுகளும் பயிர்களை மேய்ந்து இழப்பை ஏற்படுத்துவதாக உ.பி.விவசாயிகள் புகார் செய்தனர். இதில் பாஜக ஆளும் உ.பி. அரசு நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டியது.

இதனால், விவசாயிகள் தாமே அந்த கால்நடைகளை பிடித்து தம் பகுதிகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் அடைத்து வைத்தனர். இதனால், தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் உ.பி. முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சனங்கள் கிளம்பின. எனவே, பசுமாடுகளை பொதுமக்கள் தத்தெடுக்கும் திட்டத்தை கடந்த வருடம் ஏப்ரலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப் படுத்தினார்.

இதில், நாள் ஒன்றுக்கு சுமார் 30 ரூபாய் மதிப்புள்ள தீவனங் களை தலா ஒரு பசு உண்பதாக மதிப்பிடப்பட்டது. இதற்காக, மாதம் ஒன்றுக்கு தலா ஒரு பசுவுக்கு பொதுமக்கள் ரூ.900 அளித்து அவற்றை தத்தெடுக்கலாம் என அரசு கூறியது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் பத்தாயிரம் பசுக்கள் மட்டுமே தத்தெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆர்வம் காட்டததால் லட்சக்கணக்கான பசுக்கள் தத்தெடுக்கப்படாமல் உள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. மாநில கால் நடைத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘நிராதரவாக விடப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை முழுமையாக எடுக்கப்படாத கணக்கின்படி சுமார் நான்கு லட்சம் எனத் தெரியவந்துள்ளது.

இத்துறையில் போதுமான அலுவலர்கள் இல்லாத நிலையில் அனைவரும் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் பசுக்களை தத்தெடுக்கக் கோரி பிரச்சாரம் செய்யுமாறு கூறப்படுவதை எங்க ளால் செய்ய முடியவில்லை.’ எனத் தெரிவித்தனர்.

உ.பி.யில் மாடுகளை விட எருமைகளே விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பால் வற்றிய பசு மாடுகள் அநாதை யாக வீதிகளில் விடப்படுகின்றன. இதுபோன்ற மாடுகளுக்கு அடைக் கலம் அளிக்க கோசாலைகள் அமைந்துள்ளன. சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு உள்ள 5 கோசாலைகளில், ஒன்றில் அதிக பட்சமாக ஆயிரம் மாடுகள் மட்டுமே அடைக்கப்படுகின்றன. இவை, அரசு மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படுகின்றன.

இதற்காக உ.பி.மாநில அரசு சமூகசேவை நிறுவனங்களுக்கு மலிவு விலையில் நிலமும், உதவித் தொகையும் அளிப்பது உண்டு. இதனால், பல சமூக சேவகர்கள் அரசு உதவியை பெறவேண்டி கோசாலைகளை தவறாகப் பயன்படுத்துவதும் உண்டு.

இதைத் தடுத்து பசுமாடுகளை காக்க முதல்வர் யோகி அரசின் தத்தெடுக்கும் திட்டத்தால், ஒரு பசுவிற்காக பொதுமக்கள் மாதம் ஒன்றுக்கு ரு.900-த்தை வங்கி மூலம் அளிக்கின்றனர்.

SCROLL FOR NEXT