கொல்கத்தா
கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜை விழாவில் என்னை அவமானப்படுத்தினார்கள். இருப்பினும் மக்கள் சேவையில் இருப்பதால், என்னுடைய அரசியலமைப்புக் கடமைகளை நான் செய்யாமல் இல்லை என்று மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தனகர் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் துர்கா பூஜை நிகழ்ச்சி பிரம்மாண்ட முறையில் நடந்தது. கொல்கத்தாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட சமூகத்தினர் பூஜை நடத்தும் நிகழ்ச்சியை முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெக்தீப் தனகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் என பலரும் வந்திருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆளுநர் ஜெக்தீப் தனகருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்காமல், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிசையின் ஓரத்தில் இருக்கை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த நேரத்தில் ஆளுநர் ஜெக்தீப் இதை வெளிக்காட்டாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பினார்.
இந்நிலையில் ஒருவாரத்துக்குப் பின் இன்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஜெக்தீப் தனகர், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, துர்கா பூஜையின் போது இருக்கை ஓரமாக ஒதுக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில், "துர்கா பூஜைக்கு என்னை அழைத்துவிட்டு என்னை அவமானப்படுத்திவிட்டார்கள். மக்கள் சேவையில் இருப்பதால், நான் எந்த விஷயத்துக்கும் அதிருப்தி தெரிவிக்காமல் என்னுடைய அரசியலமைப்புக் கடமையைச் செய்துதான் திரும்பினேன். என்னை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு முற்றிலும் புறக்கணித்துவிட்டார்கள். எனக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது
நான் அந்தச் சம்பவத்தால் ஆழ்ந்த வேதனையும், மனச்சோர்வும் அடைந்தேன். அந்த அவமானம் எனக்குரியது அல்ல, மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமானது. இதுபோன்ற சம்பவத்தை ஒருபோதும் ஜீரணித்துக் கொள்ள முடியாது.
என்னை நிகழ்ச்சியின் ஒரு ஓரத்தில் அமரவைத்து 4 மணிநேரம் என்னைப் புறக்கணித்தார்கள். என்னை விருந்தினராக அழைத்துவிட்டு எவ்வாறு புறக்கணிப்பீர்கள். சிலர் அன்று நடந்த சம்பவத்தைப் பார்த்து எமர்ஜென்சியில் நடந்ததைப் போன்று இருந்தது என்றார்கள். அந்த அவமானத்தில் இருந்தும், வேதனையில் இருந்தும் நான் வெளியே வர எனக்கு 3 நாட்கள் ஆனது" எனக் குற்றம் சாட்டினார்.
ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி, " ஆளுநருக்கு விளம்பரப் பசி எடுத்திருக்கிறது" எனத் தெரிவி்த்தது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டாப்ஸி ராய் கூறுகையில், " இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் முடிந்துவிட்டது. இப்போது இதைப் பற்றி ஆளுநர் பேசியதற்குக் காரணம் என்ன? அவருக்கு விளம்பரப் பசி எடுக்கிறது. ஆளுநரின் செயல்பாடுகள் நாகரிகமானதாக இல்லை" எனத் தெரிவித்தார்.
பிடிஐ