குர்கான்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து, 370 பிரிவு நீக்க நடவடிக்கை அந்த மாநிலத்தில் நீண்ட காலத்துக்கு அமைதியை கொண்டுவரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
தீவிரவாத எதிர்ப்புப் படையான தேசிய பாதுகாப்பு படையின் 35-வது ஆண்டுவிழா கொண்டாட்டம் இன்று குர்கவானில் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, 370 பிரிவு நீக்கம் ஆகியவற்றால் பாகிஸ்தான் ஆதரவுடன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க உதவும்.
அனைத்து வகையிலும் வரும் தீவிரவாதத்தை எந்தவிதமான பாரபட்சமின்றி எதிர்க்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு தேசிய பாதுகாப்பு படை முக்கிய துருப்பாகவும், கருவியாகவும் இருக்கும்.
பிரதமர் மோடி அரசு ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை நீக்கியதன் மூலம், பாகிஸ்தான் மறைமுகமாக நம்முடன் செய்துவந்த போர், தீவிரவாத செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராக உறுதியான போரை தொடங்கி இருக்கிறோம். இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீரில் நீண்டகாலத்துக்கு அமைதியைக் கொண்டுவரும்.
இந்தியா நீண்டகாலமாகவே தீவிரவாதத்தின் செயல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகில் சில நாடுகள்தான் தீவிரவாதத்துக்கு எதிராக நீண்டகாலமாக போரிட்டுவருகின்றன
எந்த ஒரு நாகரீகம் மிகுந்த சமூகத்துக்கும் தீவிரவாதம் என்பது சாபக்கேடு, வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகல்லாக அமையும். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்துக்கு எதிராக எந்தவிதமான பாரபட்சமின்றி செயல்பட்டு, தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் வெல்லும்.
ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை நீக்கிய பிரதமர் மோடியின் செயல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதத்தை முழுமையாக அழித்து, நாட்டை பாதுகாக்கும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்
, பிடிஐ