நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மே 20-ல் பாஜக நாடாளுமன்ற குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
அன்றைய தினம், சோனியா காந்தி தனது வாழ்த்துகளை நரேந்திர மோடியிடம் தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து திங்கள் கிழமை (மே-26) அன்று நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கிறார்.
இந்த பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் உள்பட சார்க் நாடுகள் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
தேவகவுடா பங்கேற்பு:
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்து கொள்கிறார். இத்தகவலை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பாபு உறுதி செய்துள்ளார்.