பிவாண்டி
கடலில் கப்பல் மூழ்கும்போது பயணிகளை கைவிட்டுச் சென்ற கேப்டன் போன்றவர் ராகுல் காந்தி என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பிவாண்டி மேற்கு தொகுதியில் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, நேற்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"நடுக்கடலில் ஒரு கப்பல் மூழ்கும்போது அந்தக் கப்பலின் கேப்டன், பயணிகள் ஒவ்வொருவரையும் அதிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் எனும் கப்பல் மூழ்கிக் கொண்டுவரும்போது, கேப்டனாக இருந்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றாமல் பொறுப்பற்ற முறையில் கட்சித் தலைவர் பதவியைத் துறந்து நகர்ந்து சென்றுவிட்டார்.
கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கருணையால் முஸ்லிம் மக்கள் வாழவில்லை. நாங்கள் அரசியலைப்புச் சட்டம் அளித்த பாதுகாப்பு, கடவுளின் கருணை ஆகியவற்றால்தான் உயிரோடு இருக்கிறோம்.
மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு விரோதமானது. முஸ்லிம் பெண்களுக்கு நீதி அளித்துவிட்டதாக பிரதமர் மோடி கருதினால் அது தவறானது. உண்மையில் நீதி வழங்க வேண்டும் என விரும்பினால், மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் மராத்தியர்களுக்கு வழங்கியதுபோல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்''.
இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்
ஏஎன்ஐ