புதுடெல்லி
அயோத்தி விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உத்தர பிரதேச மாநில வக்போர்டு தலைவர் ஜாபர் அகமது பரூக்கிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி ராம ஜென்மபூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்தர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன குழு வழக்கை விசாரிக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்தர் குழு மூலம் மனு தாரர்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மத்தியஸ்த குழுவும் சமரச தீர்வு காண தொடர்ந்து முயன்று வருகிறது. உ.பி. வக்போர்டு தலைவர் ஜாபர் அகமது பரூக்கி மத்திய குழுவினரை சந்திக்கும் நிலையில் அவருக்கு மிரட்டல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பரூக்கிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்தியஸ்த குழுவைச் சேர்ந்த ஸ்ரீராம் பஞ்சு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார். அயோத்தி வழக்கு இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், இதனை குறிப்பிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குறிப்பிட்டார்.
மேலும் உத்தர பிரதேச மாநில அரசு வக்போர்டு தலைவர் பரூக்கிக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.